Thursday, August 1, 2013

அழியா நினைவுகள்... 1

இரண்டு வருடமாக வாழ்கையில் நடந்த/நடந்து கொண்டிருக்கும் விரும்பத்தகாத, அருவருப்பான சம்பவங்களிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்துக் கொண்டிருக்கிறேன். நன்றாக உறங்கி இரண்டு வருடமாகிறது. நிம்மதியான அந்த பழைய தூக்கம் திரும்ப கிடைக்கும் என்று தோன்றவில்லை. நடந்த சம்பவங்களும், அதற்கான காரணங்களும் எனக்கும், என்னை ஆட்டுவிக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும். என் தவறா? இல்லை என் விதியா? தெரியவில்லை. வாழ்கையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எனக்கு புரிய வைத்து, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை குறைத்த சம்பவங்கள் அவை. சில உறவினர்களிடமிருந்து, சில நண்பர்களிடமிருந்து என்னை விலக வைத்தவை.

வெறுத்துப்போய், வயிற்றெரிச்சலில் இருப்பவனை குடித்து விட்டு கிண்டல் செய்தவரையும், "I 'm a practical man" என்பதற்கு அர்த்தம் தெரியாமல், அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் நடந்துக்கொண்டவரையும் என் வாழ்நாளில் மறுபடியும் பார்க்கவே கூடாதென்றிருக்கிறேன்.

திருக்குறளில் 1330 குறள்கள் இருந்தாலும், பள்ளிப்பாடத்தில் இருக்கும் முக்கியமான ஒரு குரல்,
"தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
இதையெல்லாம் எதற்காக படிக்கிறோம் என்று தெரியாமல் படித்துவிட்டு "I m educated" என்று சொல்லிக்கொண்டு அலைபவர், ஏதாவது ஒரு இக்கட்டான சமயத்தில் செய்வதறியாமல் செய்த தவறுக்கு பெற்றோர்களை குற்றம் சொல்லி, அவர்கள் வளர்ப்பு சரியில்லை என்று சொல்லும் மூடர்கள்... என்ன சொல்வது?

தோற்றத்தையும், அசிங்கப்பட்டதையும் பகிர்ந்து கொள்பவனல்ல நான். அப்படியே பகிர்ந்தாலும் என்னை பார்த்து பரிதாப்படலாம் இல்லை என்னை கேவலமானவனாக நினைக்கலாம். அந்த இரண்டையுமே நான் விரும்பவில்லை.

சாதரணமாகவே என்னை பாதிக்கும் விசயங்களை எளிதில் மறக்கமாட்டேன். அதனால் நடந்தவற்றை மறக்க புத்தகங்கள், ஆசிரமம் என்று பலவற்றை நாடினேன். பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்யும் போது படிக்க tabletஐ வாங்கினேன். இந்த இரண்டு வருடங்களில் நான் படித்த புத்தகங்களின் எண்ணிக்கை 100க்கும் மேல். இச்சம்பவங்களாலும், வகுப்பெடுத்த ஆசிரியையை பிடிக்காததாலும் தடைப்பட்ட பிரெஞ்சு மொழி வகுப்பில் மறுபடியும் இணைந்தேன்.

எப்போதோ ஆரம்பித்த இந்த blogஐ update செய்ய ஆரம்பித்தேன். பிரெஞ்சு மொழி வகுப்பில் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். காலையில் அவர்களுடன் உணவருந்தும் நேரம், கல்லூரியில் படிக்கும் போது கூட செய்யாத group study, ஹிந்தியே தெரியாமல் ஹிந்தி படம் என்று என்னை கொஞ்சம் புதிதாக உணர்ந்தேன். ஒரு நாள் கூட வகுப்பை புறக்கணித்தில்லை. இன்னும் ஒரு வாரம் தான். வகுப்பு முடிய போகிறது. நான் அடுத்த level இணைந்தாலும் இவர்களுடன் பலவற்றை இழக்கப்போகிறேன்.

No comments: