Friday, October 25, 2013

When Strangers Meet

எழுதியவர்: ஹரி குமார். K

தந்தை - மகனுக்குமான உறவை பற்றியது. எனக்கென்னவோ தந்தையின் நிலையை இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நீங்கள் செல்லும் வழியில் ஒரு தடை இருக்கிறதென்றால், தெரியாத ஒருவருக்கு அவ்வழியில் ஒரு தடை உள்ளது என்று மனிதாபிமான எண்ணத்தில் எச்சரிப்பீர்கள். அதே நண்பன் அல்லது உறவுக்குகாரன் என்றால் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்போம். அதே தன் மகன் இல்லை மகள் என்றால் அத்தடையை நீக்க என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள். அதற்கு அவர்கள் மேல் உள்ள பாசம் அல்லது தன் மகன் அத்தடையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற ஈகோ அல்லது தன்னால் உருவாக்கப்பட்டவன் தானே என்ற எண்ணம் தான் காரணமாக இருக்கும். என்ன கடைசி இரண்டு, அவர்களை மகனின் எண்ணத்தை ஆசையை புரிந்துக்கொள்ள விடாது.

பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வா என்று சொல்லாமல், மைதானம் சென்று சிறிது நேரம் விளையாடிட்டு வா என்றும், என் விருப்பபடி டிப்ளோமா, B.Eயிலும் எனக்கு பிடித்த கணிபொறி படிப்பு, வேலைக்காக அலைந்த போதும் ஆதரவாக இருந்து, என் வாழ்வை இரண்டு வருடத்திற்கு முன்பு வரை   என் விருப்பபடி வாழ அனுமதித்த என் பெற்றோரை இந்நாவல் படிக்கும் போது பல முறை நினைத்துக்கொண்டேன்.

இந்நாவல் படிக்கும் போது உங்களுக்கும் உங்கள் தந்தைக்குமாக உறவை நிச்சயமாக எண்ணிப்பார்ப்பீர்கள். எனக்கு அமீர்கான் நடித்த Talaash படமும் ஞாபகம் வந்தது. அந்த படத்திற்கும் இக்கதைக்கும் ஒரே ஒரு ஒற்றுமை தான்.

இந்நாவலில் மலையாள Bollywood நடிகனான அந்த பேடியின் பெயரை பயன்படுத்தியது பிடிக்கவில்லை.

Before I go to sleep

எழுதியவர்: S J Watson

கஜினி திரைப்படத்தில் வருவது போல, இக்கதையின் முக்கிய பெண் கதாபாத்திரம் ஒரு விபத்தினால் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார். படிப்படியாக மருத்துவத்தினாலும், பயிற்சியினாலும் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து அவர் ஞாபகங்களின் வாழ் நாள் ஒரு நாள் என்றாகிறது. அதாவது ஒரு நாள் வரை தான் அவர் ஞாபகம் வைத்திருப்பார். தூங்கி எழுந்த மறு நாள் மறந்து விடுவார். இச்சூழ்நிலையில் தான் கதை தொடங்குகிறது.

ஒரு மருத்துவர், அவர் செய்யும் ஆராய்ச்சிக்காகவும், ஏற்கனவே இது மாதிரியான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த அனுபவத்தையும் வைத்து தாமாகவே அப்பெண்ணை சந்தித்து தினமும் நடக்கும் விஷயங்களையும், அப்பப்ப ஞாபகம் வருகிற பழைய விஷயங்களையும் எழுதி வைத்துக்கொள்ள சொல்கிறார்.

தினமும் அந்த மருத்துவர், அப்பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பெண் எழுதி வைத்த குறிப்புகள் உள்ள புத்தகம் வீட்டில் எங்கு உள்ளதென்று சொல்ல, அப்பெண் அந்த குறிப்புகளின் மூலம் தனக்கு நடக்கின்ற, நடந்த விஷயசங்களை ஞாபகபடுத்திக் கொள்கிறார். சில சமயங்களில், சில பழைய விசயங்களும் ஞாபகம் வர, அதை வைத்து தன் கணவர் சொல்பவை பொய் என்று கண்டு பிடிக்கிறார்.

ஏன் அப்பெண்ணின் கணவர் பொய் சொல்கிறார்? எதனால் அவர் ஞாபகம் பறிபோனது என்று கதை கொஞ்சம் சுவாரசியமாக நகருகிறது.

அப்பெண் அனுபவிக்கும் கஷ்டங்கள் எனக்கு பெரிதாக தெரியவில்லை. செய்த தவறிற்கான தண்டனை என்று தான் தோன்றியது.

Thursday, October 10, 2013

S V V

ராஜாமணி

www.scribd.com சென்று தமிழ் புத்தகங்களை எப்போதாவது தேடுவேன். சுதந்திரத்திற்கு முன்னாடி எழுதின நாவல் என்று இந்நாவலை பற்றி குறிப்பிட்டிருந்ததால் தரவிறக்கம் செய்தேன். நாவலின் பின் அட்டையிலும், எஸ்.வி.வியை பற்றி 1940ல் ஆனந்த விகடனில் அமரர் கல்கி எழுதியதையும் படித்ததும் இந்நாவல் படித்தே தீரவேண்டும் என்று படிக்க ஆரம்பித்தேன்.

கதாநாயகனுக்கு படிப்பு மட்டும் வெகு தூரம். அதை வைத்து அப்பா, மாமா, அவரின் பெண் மட்டம் தட்ட, படிப்பு மீது வெறுப்பு வராமல் ஒரு வைராக்கியத்தோடு படிக்க ஆரம்பிக்கிறார். சொந்த ஊரை சேர்ந்த ஒரு பெண், அந்த ஊரிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், மாமன் மகள் என்று இம்மூவரில் யாரை கதாநாயகன் கை பிடிக்கிறார் என்று நீண்ட நெடுந்தொடருக்கான கதையாக சொல்லியிருக்கிறார்.

எடக்கு மடக்கான உரையாடல்களை தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.