Showing posts with label Tamilina throgikal. Show all posts
Showing posts with label Tamilina throgikal. Show all posts

Wednesday, September 4, 2013

தமிழின துரோகிகள்

ஈழத்தில் நடந்த கோரங்களையும், அதற்கு துணை புரிந்த மானங்கெட்ட, ஈன பிறவிகளுக்கு நாம் ஒரு இனத்திற்கு, அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்கிறோம் என்பது தெரியும். இந்த பதிவு முதுகில் குத்திய அந்த பேடிகளை பற்றியதில்லை. தன் இனத்திற்கு துரோகம் செய்கிறோம் என்பதை தெரியாமல் (தெரிந்தும் இருக்கலாம்) வாழும் சில/பல துரோகிகளை பற்றியது.

போன வாரம், நான் வேலை செய்யும் அலுவலகத்தில், ஒரு பயிற்சி. வேறொரு நிறுவனத்திலிருந்து வந்த பெண் ஒருவர் அந்த பயிற்சி கொடுத்தார். இடைவெளியில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது, சக ஊழியர்கள் அந்த பெண்ணிடம், அவரின் சொந்த வாழ்கையை பற்றி கேட்க, அவரும் நான் இந்த ஊரில் படித்தேன், அந்த ஊரில் இரண்டு வருடம், இந்த ஊரில் சில வருடம் வேலை செய்தேன் என்று சொல்லி கடைசியில் "நான் தமிழ், ஆனால் தமிழ் தெரியாதென்று" சொன்னார். அவர் சொன்னது, "so sad na". அவர் சொன்ன விதத்திலிருந்து, எனக்கு அவர் வருத்தப்பட்டதாக தெரியவில்லை.

அப்படி அவர் உண்மையாக வருத்தப்பட்டதாக இருந்தால், அவர் தமிழை கற்றுக் கொண்டிருக்கலாம். தமிழ் ஒன்றும் அவ்வளவு கடினமான மொழி அல்ல. பெங்களூரில் எனக்கு தெரிந்த ஒருவர் தமிழ் நண்பர்களிடம் பேசியும், தமிழ் படங்களை பார்த்தும் தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். நான் அந்த பெண்ணை குற்றம் சொல்ல வில்லை. ஒரு வேளை, அவரின் தந்தைக்கு அடிக்கடி மாற்றலாகியிருக்கலாம். அதனால் அவருக்கு தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அவர் தந்தை, வேலைக்காக வேறு இடத்திற்கு சென்றது தப்பில்லை. ஆனால் அதற்காக தன் தாய் மொழி வேண்டாம் என்று விடுவதென்பது எந்த விதத்தில் நியாயம்?

அவர்கள் குடும்பத்தில், அவர் தந்தையோடு தமிழ் அழிந்தது. இந்த பெண்ணிற்கு தமிழ் தெரியாது, தமிழின் அருமை தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதனால் அந்த பெண்ணின் வாரிசுகள்(அதாவது அடுத்த தலைமுறை) தமிழ் கற்றுக் கொள்வார்கள் என்பது சந்தேகம் தான். இவர்கள் மட்டுமில்லை, இவர்களை போல நான் பல பேரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் சொல்லும் ஒரே பதில், "வேலைக்காக அப்பா அந்த ஊருக்கு சென்றார், நான் அங்கு படித்து, வளர்ந்தேன். அதனால் எனக்கு தமிழ் தெரியாது". ஆனால் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இப்படி சொல்வதை நான் கேட்டதில்லை.

அவர்களுக்கு அவர்கள் செய்யும் தவறு/துரோகம் தெரியவில்லை. இந்த மாதிரி வேலைக்காக வேறு இடத்திற்கு செல்பவர்கள் எல்லாம் தமிழ் வேண்டாம் என்று விட்டால், தமிழ் இன்னும் சிறிது காலங்களில் அழிந்து விடும். தன் இனமும், மொழியும் அழிய தானும் ஒரு காரணம் என்று தெரிந்தோ இல்லை தெரியாமலோ இருக்கும் இவர்களும் என்னை பொறுத்தவரை தமிழின துரோகிகள் தான்.